Corona

உலகப் பொருளாதார சரிவு; 38 மத்திய வங்கிகளின் அதிரடி நடவடிக்கை; வட்டியை மீண்டும் குறைக்குமா ஆர்.பி.ஐ?

ஆர்.பி.ஐ கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால், பல்வேறு தொழில்துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த 38 மத்திய வங்கிகள், பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளன. இவை அனைத்தும் தங்களது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. இவற்றில் 11 மத்திய வங்கிகள் மட்டும் தங்களது வட்டி விகிதத்தை இரண்டு வார காலத்துக்குள் இரண்டு முறை குறைத்துள்ளன. இதில், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, ஹாங்காங்க், ஐஸ்லாண்ட், குவைத், மகாவு, குவாதார், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அடங்கும்.

இவ்வாறு வட்டி விகிதத்தைக் குறைப்பதோடு பல்வேறு மத்திய வங்கிகள் பொருளாதாரத்தைச் சீர் செய்ய பணத்தையும் வழங்கியுள்ளன. இது, வீடுகள் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு நிதியாக பயன்படுத்த செலுத்தப்பட்டவையாகும். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய வங்கிகள் கூடுதல் பத்திரங்களையும் வாங்கியுள்ளன. இத்தோடு தங்களது முதலீடு அல்லது இருப்புத் தேவைகளையும் மத்திய வங்கிகள் குறைத்துள்ளன. கூடுதல் பத்திரங்களை வாங்கிய நாடுகளில் ஸ்விடன், ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சீனா ஆகியன அடங்கும். முதலீடு அல்லது இருப்புத் தேவைகளை (reserve requirements) குறைத்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து, ஹாங்காங், கனடா, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சீனா ஆகியன உள்ளன.

நிதிச் சிக்கல்
நிதிச் சிக்கல்

இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்மூலம் மார்ச் 24 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில், கூடுதலாக 30,000 கோடி ரூபாய்க்கு அரசாங்க பத்திரங்களைத் திரும்ப வாங்குவதாக அறிவித்தது. ஆனால், வட்டி விகிதத்தைக் குறைப்பதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த அறிவிப்பு பற்றி, கேர் ரேட்டிங்க்ஸின் முதன்மைத் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், “இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு தொழில்துறைகள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்படி மூடப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி, பண வீக்கத்தைப் பொருட்படுத்தாது வட்டி விகிதத்தை 50 பிபிஎஸ்க்கு (50 bps) குறைப்பதாக அறிவிக்கலாம். இந்த அறிவிப்பு ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறவுள்ள பணக் கொள்கை கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்னரோ அறிவிக்கப்படலாம்” என்றார்.

இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய் செலுத்தி அரசாங்கப் பத்திரங்களைத் திரும்ப வாங்கியிருந்தது. அன்றுதான் திறந்த சந்தை செயல்பாட்டிற்கும் (open market operations) ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது, வங்கித் துறையில் பணம் புழங்கிக்கொண்டே இருப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகும். ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள பிற வங்கிகளுக்கு அரசாங்க பத்திரங்களுக்குப் பதிலாகப் பணத்தை வழங்கும். இந்தப் பணத்தைக் கடன் வழங்க பயன்படுத்துமாறு வங்கிகளை அறிவுறுத்தும். இதன்முலம் இக்கட்டான காலகட்டத்திலும் கடன் சந்தைகள் செயல்பட வழி வகுக்கும்.

ஆர்.பி.ஐ
ஆர்.பி.ஐ

தங்களது திறந்த சந்தை செயல்பாடு பற்றி ரிசர்வ் வங்கி தரப்பில், “கடந்த மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற திறந்த சந்தை செயல்பாடு ஏலத்துக்கு (open market operation’s auction) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இதனால் நாட்டின் நிதிச் சூழலும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆனால், நெருக்கடி சூழலிலும் எல்லா நிதித் துறைகளும் பணப் புழக்கத்தோடும் வருவாயோடும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள சூழலில் மக்களிடம் ஏற்கெனவே கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சமயத்தில் நிதி சம்பந்தப்பட்ட அச்சமும் சேர்ந்துவிடக் கூடாது. இதனால் மக்களின் தேவைகளை அறிந்து பொருளாதார நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close