Lifestyle

சோர்வுக்கு குட்பை!

திருமண நிகழ்ச்சிகள் என்றாலே கொண்டாட்டங்களின் சங்கமம்தான். `சங்கீத்’,  மறுவீடு அழைப்பு, விருந்து… இப்படி கலகலப்பான நிகழ்ச்சிகளால் எல்லா மனங்களும் நிறைந்துவிடும். இந்தக் குதூகலத்தை அனுபவிக்க, மணமக்கள் உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். மணமக்களுக்குச் சோர்வு ஏற்பட்டாலும், அதை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் ஃப்ரெஷ்ஷாக வலம்வர வேண்டிய சூழல் ஏற்படும். 

சோர்வுக்கு குட்பை!

போட்டோஷூட் இருப்பதாலேயே புற அழகு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் மணமக்கள். குறிப்பாக சருமப் பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு மற்றும் உடை தேர்வைச் சொல்லலாம். ஆனால், புத்துணர்வுக்கும் முகமலர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை உடலின் ஆற்றல். ஆற்றல் திறன் குறைந்தால் உடலோடு மனமும் சோர்வடையும். உடல் ஆற்றலை அதிகரிக்க, உணவில் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும். அதற்கான சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

“ஆற்றல் திறன் எதனால் குறைகிறது என்பதையே நாம் முதலில் கண்டறிய வேண்டும்.  சோர்வைக்காட்டிலும், டிஹைட்ரேஷன்தான் ஆற்றலை மிக வேகமாகக் குறைக்கும். எனவே, மணமக்கள் நீர்ச்சத்து நிறைந்த உணவை அதிகமாக எடுக்க வேண்டும். வெறும் நீராக மட்டுமல்ல… பழங்கள், காய்கறிகள், ஜூஸ் வகைகள் என வெவ்வேறு வகையில் நீர்ச்சத்து எடுத்துக்கொள்ளலாம்.

திருமணத்துக்கு முந்தைய நாட்களில், உடல் ஆற்றலை இழக்க முக்கியக் காரணமாக இருப்பது ஷாப்பிங். எனவே, அந்த நேரத்தில் முன்னெச்சரிக்கையாக தர்ப்பூசணி, கூழ், இளநீர், கஞ்சி, நீர்மோர் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். சோர்வாக உணரும்போது, உடனடியாக அவற்றை உட்கொள்ள வேண்டும். பழங்களை சாலட் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது சோர்வு ஏற்படுவது இயல்பு. நண்பகல் என்றால் டீ அல்லது காபி குடிப்பது, ஜூஸ் வகைகளைக் குடிப்பது அல்லது பிஸ்கட் சாப்பிடுவது, மாலைநேரத்தில் சாலையோரங்களில் விற்கப்படும் பானிபூரி, பேல்பூரி போன்றவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். இவை அப்போதைக்கு புத்துணர்வைத் தந்தாலும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது. முக்கியமாக, செரிமானக்கோளாறு ஏற்படும். அது உடலின் ஆற்றலை முழுமையாகக் குறைத்துவிடும். 

சோர்வுக்கு குட்பை!

திருமணப் பரபரப்புக்கு மத்தியில், உணவைத் தவிர்ப்பவர்கள் பலருண்டு. காலை உணவையோ, இரவு உணவையோ தவிர்ப்பதால் உடல் இயக்கத்தில் சிக்கல் ஏற்படும். இது, சோர்வை ஏற்படுத்தி வெளியிடங்களுக்குப் போகும்போது சிக்கலை ஏற்படுத்திவிடும். அத்துடன் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாத சூழலை ஏற்படுத்திவிடும். எனவே, எந்தச் சூழலிலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. அதேபோல எந்த உணவையும், நேரம் கழித்துச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, இரவில் நேரம் கழித்துச் சாப்பிடவே கூடாது. சாப்பிட்டவுடன் உடனடியாக படுக்கைக்கு சென்றுவிடக் கூடாது. உணவுக்கும் உறக்கத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேர இடைவெளியாவது இருக்க வேண்டும். இரவு உணவு, ஹோட்டலிலோ, மற்றவர்கள் வீட்டிலோ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால், எளிதில் செரிக்கும் உணவுகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சரியான நேரத்துக்குள் சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே விதி. இட்லி, தோசை, சாதம் போன்ற வடிவங்களில்தான் உட்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. புரதச்சத்து அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த பழம், காய்கறி, ஸ்மூத்தி வகைகளாகவும் உட்கொள்ளலாம். அல்லது கஞ்சி வகைகளைச் சாப்பிடலாம். நேரம் ஒதுக்கி, உட்கார்ந்து சாப்பிட நேரம் இல்லாத சூழல் ஏற்பட்டால், மேற்கூறிய மாற்று உணவுகளை எடுத்துச் செல்லலாம். பசி எடுக்கும்போது உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும்.

அனைத்துவேளை உணவிலும் புரதச்சத்து இருக்கவேண்டியது அவசியம். எனவே, புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், மீன், பன்னீர், மட்டன் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். அடிக்கடி ஆற்றல் குறைந்து சோர்வாகிவிடுபவர்கள், மருத்துவ ஆலோசனைக்குப்பிறகு மீன் எண்ணெய் மாத்திரைகள், ஒமேகா 3 மாத்திரைகளை வைத்திருப்பது நல்லது. தேவைப்படும்போது அவற்றைச் சாப்பிடலாம்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள் திருமணத்துக்கு முன்பே அவற்றைத் தவிர்க்க வேண்டும். தேனிலவு செல்லும்போது, போகும் இடத்தில் பிரசித்திபெற்ற உணவுகள் என்னென்ன என்பதை முன்பாகவே கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளவும். அந்த உணவுகள் உடலுக்கு ஒப்புக்கொள்ளுமா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களைவிடப் பயணம் செய்யும்போது உணவு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிறைய நிகழும் என்பதால், எடை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போது, ஆற்றல் திறன் குறைவதும் இயல்பு. எனவே, எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி, உணவுமுறை மாற்றங்களும் அதற்கு அடிப்படை.  திருமணத்துக்குப் பிறகு, பெண்களின் உணவுமுறை மாற்றமடையத் தொடங்கும். அதுவரை அவர்கள் எடுத்துக்கொண்ட உணவின் தன்மை, இப்போது முற்றிலும் வேறுவிதமாக அமையலாம். புதிய உணவு முறையை உடல் ஏற்றுக்கொள்ள, சில காலம் பிடிக்கும். சில நேரங்களில் அதுவே எடை அதிகரிக்கக் கூடுதல் காரணமாக அமையும். இது வேறு சில உபாதைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, பெண்கள் திருமணத்துக்குப் பிறகு நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினமும் மூன்று பழ வகைகளைச் சாப்பிடுவது நல்லது.

திருமண நேரத்தில் இளநீர், சுவையூட்டப் பட்ட பால், மோர், காய்ச்சிய பால் ஆகியவற்றில் ஏதாவதொன்றை உடன் வைத்துக்கொள்ளலாம். வாழைப்பழம், பப்பாளி, தர்ப்பூசணி போன்ற பழங்களை வைத்துக்கொள்வதும் சிறப்பு.

ஹெவி ஃபுட் சாப்பிட்டுவிட்டால், அடுத்தவேளை உணவை லைட்டாக அமைத்துக்கொள்வது நல்லது. ஹெவி ஃபுட் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து லெமன் ஜூஸ், இஞ்சி டீ குடிப்பது செரிமானச் சிக்கல்களைத் தவிர்க்கும். சிலர் வயிறு நிறைந்துவிட்டது என அதையே காரணமாகச் சொல்லி அடுத்தவேளை உணவைத் தவிர்ப்பதுண்டு. சாப்பாட்டைத் தவிர்ப்பது அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும். ஏற்கெனவே எடுத்துக்கொண்ட ஹெவி ஃபுட் செரிமானச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆக, இரண்டு பிரச்னைகளும் சேரும்போது, சிக்கல் அதிகமாகும். எனவே, உணவை எதற்காகவும் தவிர்க்க வேண்டாம்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளான மஷ்ரூம், தேங்காய், பழங்கள், பருப்பு, சென்னா போன்றவற்றை அன்றாடம் ஏதோ ஒருவகையில் சாப்பிடுவது நல்லது. இவற்றில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கும் என்பதால், உடலுக்கு நல்லது” என்கிறார் கற்பகம் வினோத். 

ஜெ.நிவேதா

சோர்வுக்கு குட்பை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close